8 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கணவனுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை நேற்று (26) புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி தமரா விக்கிரமசேகர பிறப்பித்துள்ளார்.
நவகம முள்ளேகம கோயில் வீதியைச் சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் மன்னப்பெரும மு சுசில் பண்டார என்ற ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய நபருக்கே குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தனது மனைவியான துஷாரி காஞ்சனா (வயது 27) என்பவரை 2015 ஜூலை 22 ஆம் திகதி, மாலை கூரிய ஆயுதத்தால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதி நவகத்தேகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
8 ஆண்டுகளாக நீடித்த நீண்ட விசாரணையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.