ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ehlhளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இது தொடர்பில் வினவினார்.
அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் பற்றிய சில காணொளிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்த பொலிஸ் அதிகாரியும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை.
அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் மாத்திரமே அதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுத்துள்ளார்.
அத்துடன், தாக்குதல்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்புகூறவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
உயர்நீதிமன்றமே அவரை குற்றவாளியென கண்டறிந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.