ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலை நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, நேபாளத்துடனான தனது நீண்டகால உறவை, ஒத்துழைப்பின் பகுதிகளை பன்முகப்படுத்துவதன் மூலம் ஒரு ஆற்றல்மிக்க அரசியல், வர்த்தக மற்றும் வர்த்தக பங்காளித்துவமாக இலங்கை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் காத்மாண்டுவில் நடைபெறவுள்ள இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் புஷ்ப கமல் தஹால், இது எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேபாளம் மற்றும் இலங்கை மக்கள் குறிப்பாக மதம் மற்றும் கலாசாரத்தில் பல பொதுவான தன்மைகளைக் கொண்டுள்ளனர்.
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளதாகவும், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளை ஒன்றோடொன்று இணைக்கும் வழிகளை ஆராய்ந்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.