ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கமைய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்தநிலையில், 292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
இதேவேளை, உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான ரோஹித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்குபற்றுகின்றன.
இந்தநிலையில், ஆசிய கிண்ணத் தொடரில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா, சஞ்சு ஷேம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய குழாமில் ஹர்த்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.