கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் நேற்று (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஊர்வலமாக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உட்பட நிலமேமார்களை, ஜனாதிபதி வரவேற்றார்.
அதனையடுத்து தியவடன நிலமே ஜனாதிபதியிடத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆவணத்தை கையளித்தார்.
பெரஹெராவில் கலந்துகொண்ட யானைகளை அடையாளப்படுத்தும் வகையில் “சிந்து’ யானைக்குட்டிக்கு ஜனாதிபதியால் பழங்கள் வழங்கப்பட்டதையடுத்து, பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கமைய ஜனாதிபதியுடன் நிலமேக்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து பெரஹெராவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.