சொத்துக்களை ஈட்டியமை குறித்து வெளிப்படுத்தாமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 27ம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கை தொடர முடியாது என பிரதிவாதி சமர்பித்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைக்க திகதி வழங்குமாறு பிரதிவாதி விடுத்த கோரிக்கையின் பிரகாரம் மேல் நீதிமன்றம் குறித்த வழக்கை பிற்போட்டுள்ளது.
2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை விமல்வீரவங்ச அமைச்சராக இருந்த போது, 75 மில்லியன் ரூபாவிற்கு மேல் சொத்துக்களை அவர் எவ்வாறு ஈட்டினார் என்பது குறித்து தகவல்களை வெளியிட தவறியமையினால், கையூட்டல் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.