பௌசரின் முன்பக்கத்தில் அவசர சேவைகள் என்ற பலகையுடன் களு கங்கையில் மலக்கழிவுகளை கொட்ட வந்த பௌசர் வாகன சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களுடன் பௌசரையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அங்குருவத்தோட்ட மாபுகொட பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் பௌசரை நிறுத்தி இருவர் களுகங்கையில் மலக்கழிவுகளை கொட்டுவதற்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் களுத்துறை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும், அப்பகுதியிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காக கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.