பலதரப்பு நிறுவனங்களின் வரவு செலவுத் திட்ட ஆதரவுடன் வெளிப்புற நிதியுதவி வர ஆரம்பித்ததும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று நம்புவதாக போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கை வங்குரோத்தான நாடாக அறிவித்ததை அடுத்து அனைத்து வெளிநாட்டு நிதியுதவிகளும் இடைநிறுத்தப்பட்டதாகவும் இதனால் பல்வேறு துறைகளில் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவுமு் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய வாரியத்துடனான கலந்துரையாடல்களும் வெற்றியடைந்ததாகவும் உள்நாட்டு கடனை மேம்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதுடன், விரிவான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையை திவால்நிலையிலிருந்து விடுவித்து பாரிய நித்திய நிதியளிப்புக்கான கதவுகளைத் திறக்கும் உடன்படிக்கைக்கு வரமுடியும் என்று நம்புவதாகவும் பின்னர் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார்.