கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட வகுப்பு ஆசிரியர், சிறுமியை வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் எரிக்கப்பட்டுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ அறிக்கைகளை கருத்திற் கொண்டு சிறுமியை தாயின் பாதுகாப்பில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சிறுமி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை தடயவியல் மருத்துவ அதிகாரி முன்னிலையில் கொண்டு சென்றபோது, சிறுமி 8 முறை பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டால் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக தடயவியல் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையின் போது, கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தன்னை வன்புணர்வு செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
அதன்படிஇ குறித்த பாடசாலையில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைத்து மாணவர்களும் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு சிறுமியிடம் காட்டப்பட்ட போதிலும் குறித்த மாணவனை சிறுமி அடையாளம் காட்டவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.