யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்தது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது.
படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்நிலையில் படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) படகினை கடலுக்குள் இறக்குவதற்கான முன்னர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு , படகு கடலினுள் இறக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை கடற்பகுதியில் இரு நாட்கள் படகு தரித்து நின்று , வீதி அபிவிருத்தி அதிகார சபை , மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் படகின் தரம் மற்றும் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்து பயணிகள் சேவைக்கு அனுமதி வழங்கிய பின்னர் மீண்டும் குமுதினி படகு சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.