சதொச நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி கித்சிறி சில்வாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் ஏப்ரல் 15ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதையடுத்துஇ வழக்கை அக்டோபர் 12-ம் திகதிக்கு அழைத்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2012 ஆம் ஆண்டு, சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக ஆணைக்குழு இலஞ்ச வழக்கை தாக்கல் செய்தது.