ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்க முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கத்தில் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக மலையக மார்க்கத்தின் சுற்றுலா தளங்களை மையமாகக்கொண்ட இடங்களையும் குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரயில்வே காணிகளை குத்தகைக்கு வழங்கும் திட்ட முன்மொழிவுகளின் செயற்றிறன், அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அதனூடாக கிடைக்கும் பங்களிப்பு மற்றும் இடையூறுகளின்றி ரயில்வே திணைக்களத்தின் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் இதன்போது கவனத்திற்கொள்ளப்படவுள்ளன.