கடந்த 15ஆம் திகதி முதல் 60 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தற்போதுள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று (12) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடினர்.
அங்கு கையிருப்பில் உள்ள மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்குவதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 15 வகை மருந்துகளின் விலையை பத்து வீதத்தால் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை தயாரித்து சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட மருந்துகளில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல்வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.