சர்வதேச பொலிஸான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள 6,872 நபர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்போலின் அண்மைய புள்ளி விபரங்கள் படி, அந்த ஏழு பேரில் நால்வர் இலங்கையில் தேடப்பட்டு வரும் நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய மூவரும் வெளிநாடுகளில் செய்த பல குற்றச்செயல்களுக்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் தேடப்பட்டு வரும் நபர்கள் ஆவர்.
இன்டர்போலின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, 38 வயதான டி சொய்சா ஜகமுனி சுஜீவா என்ற கொஸ்கொட சுஜீ, நடராஜா சிவராஜா (49), முனிசாமி தர்மசீலன் (50), விக்னராசா செல்வந்தன் (35) ஆகியோர் இலங்கை சட்ட அமலாக்க பிரிவினரால் தேடப்பட்டு வருகின்றவர்கள் ஆவர்.
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, தற்காலிகமாக கைது செய்ய, உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.