தெமட்டகொடையில் நிதி நிறுவனமொன்றை நடாத்தும் நபரொருவரை கெப் வண்டியில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரை கைது செய்ய தெமட்டகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று நிதி நிறுவன உரிமையாளரைக் கடத்த வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யத் தேடப்படும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் கடமையாற்றுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிதி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான மாகொல பிரதேசத்தில் உள்ள வீட்டின் பத்திரம் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு என்பனவும் கடத்தல்காரர்களால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளரை கொழும்பு ரோயல் கார்டனுக்கு அருகில் வைத்து விட்டு சென்ற நிலையில் குறித்த உரிமையாளர் தெமட்டகொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.