கடந்த ஐந்து வருடங்களில் கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்வதற்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் மேல் (ரூ. 15,107,894.00) செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 இல் 947,724 ரூபாவும், 2019 இல் 4,199,499 ரூபாவும், 2020 இல் 3,814,072 ரூபாவும், 2021 இல் 4,608,708 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகரசபைச் செயலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர மேயராக பதவியேற்றதன் பின்னர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் செலவுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மேற்படி உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்வதற்கு பணியாளர்களை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு 15,107,894 ரூபாவை செலுத்தி ஆரம்பத்தில் 8 தொழிலாளர்களையும் 2021 பெப்ரவரி 16 முதல் 9 தொழிலாளர்களையும் பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முற்றத்தை மாத்திரம் துப்பரவு செய்யும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தமது பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் காணி முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பிரிவு தெரிவித்துள்ளது.