29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக கடத்திச் சென்று பலவந்தமாக தன்பிடியில் வைத்து கொண்ட மீன் வியாபாரி ஒருவர் கம்புருபிட்டிய மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மீன் வியாபாரியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவுசெய்த பொலிஸார் அவரை வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாகவும், தப்பிச் சென்றால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவதாக கூறி சந்தேக நபர் தன்னை அச்சுறுத்தியதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தலைமுடியை வெட்டி கத்தியை காட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 05 மீன் வெட்டுக் கத்திகள் மற்றும் குத்துவிளக்கு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த கைப்பேசி மற்றும் மெமரி கார்டுகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்களும் கைப்பேசியில் இருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
36 வயதுடைய சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.