கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பரவிவுள்ள இந்த அதிகம் அறியப்படாத சுவாச வைரஸின் அண்மைய அதிகரிப்பு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகளும் விழிப்பு நிலையை அறிவித்துள்ளனர்.
தாம் இந்த வைரஸின் புதிய வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பரவும் புதிய நோய் குறித்து தமது அமைச்சு தொடர்ந்தும் விழிப்புடன் உள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அது இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அமெரிக்காவில் பரவும் வைரஸ் தொடர்பில் தாம் நிலைமையை கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்
அமெரிக்காவிற்கு வெளியே இது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றாலும், எல்லைகளுக்கு அப்பால் அது பரவும் வாய்ப்பை கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் தொற்று முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. 2001, இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் சளி, காய்ச்சல் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வைரஸ், இருமல், தும்மல், தொடுதல் போன்ற நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
கைகுலுக்கல், வைரஸ் உள்ள பொருட்கள் அல்லது அதன் பரப்புகளைத் தொடுதல் என்பவற்றாலும் இந்த நோய் பரவும் ஆபத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.