MT நியூ டயமண்ட் மற்றும் MV எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல்கள், விபத்துக்குள்ளானபோது வழங்கிய உதவிகளுக்கு, இலங்கையிடம் இந்தியா, இழப்பீடு கோருவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
2020 செப்டம்பர் மற்றும் 2021 மே மற்றும் ஜீன் மாதங்களில், குறித்த இரு கப்பல்களும், இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானபோது வழங்கிய உதவிகளுக்கு, இலங்கையிடம் இந்தியா, இழப்பீடு கோருவதாக ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள், உண்மைக்குப் புறம்பானவை என்பதுடன், தவறானவையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இலங்கை கடற்பரப்பில் இரண்டு கப்பல்களும் தனித்தனியாக தீயில் எரிந்தபோது, வழங்கிய உதவிக்காக 890 மில்லியன் இந்திய ரூபாவை இந்தியா எழுத்துப்பூர்வமாகக் கோரியுள்ளதாகக் கூறினார்.