போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ ஸ்ட்ரீம் மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார் .
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் போதகர் பெர்னாண்டோ கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறினார்.
“யாராவது குற்றம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் அவருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது. இது குறிப்பிட்ட விடயத்திற்கு மாத்திரமல்ல எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறையாகும்” என இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.