“தோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது தொடரில் தமது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடந்த, சென்னை சுப்பர் கிங்ஸின் இறுதி போட்டியின் பின்னர், நேற்று மஹேந்திர சிங் தோனி தலைமையிலான அணி, மைதானத்தை வலம்வந்து ரசிகர்களுக்கு விடை கொடுத்தது.
அதன்போது, ஐபிஎல் 2023க்கான வர்ணனைக் குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தோனியை நோக்கி ஓடி வந்து தனது சட்டையில் அவரின் கையொப்பத்தை வாங்கினார்.
தோனியின் கையெழுத்தை அவரது சட்டையில் பெற்ற பிறகு, கவாஸ்கர், “மீதமுள்ள போட்டிகளுக்கு எனக்கு ஒரு புதிய இளஞ்சிவப்பு சட்டை கொடுங்கள்” என்று நேரலையில் கூறினார்.
தோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள், தலைமுறைக்கு ஒருமுறை கூட வரமாட்டார்கள்” என்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வை கவாஸ்கர் எதிரொலித்தார்.