கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நுகர்வோர் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் கால்நடை உற்பத்தித் துறையில் நிலவும் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில்துறையினருடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கோழிப்பண்ணை மற்றும் முட்டைத் தொழிலை முறையாகப் பேணி, நியாயமான விலையில் அந்தப் பொருட்களை நுகர்வோரின் கைகளில் சேர்ப்பதில் அரசின் கவனம் குவிந்துள்ளது.
மேலும், கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் சோளம் தொடர்பான பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக சம்பந்தப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வருடாந்த சோளத் தேவையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தொகைக்கு தேவையான அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.