மீன் வாங்கச் சென்ற இளைஞன், யுவதி மீது லொறியொன்று மோதியதில், யுவதி உயிரிழந்ததோடு, இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற யுவதி என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கல்அஸ்சேன சந்தியில் நிறுத்தியுள்ளனர்.
பின்னர், இருவரும் மீன் வாங்கிக்கொண்டிருக்கும் போது, களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி வந்த லொறி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது இருவரும் படுகாயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது குறித்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.