2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் செல்லவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியைத் தடுக்க நீதிமன்றத்திடம் இடைக்காலத் தடை கோரியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
நேற்று (20) இரவு முதல் இன்று (21) காலை வரை திட்டமிடப்பட்டிருந்த கவனயீர்ப்புப் பேரணி தொடர்பில் நீதிமன்றத்திடம் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) மாலை நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் இருந்து நீர்கொழும்பு நகரம் வரை எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் பொது பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்ட குழுவொன்று முயற்சிப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பேரணியினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதோடு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸார், பொது இடத்திலோ அல்லது பொருத்தமான இடத்திலோ போராட்டத்தையும் பேரணியையும் நடத்துமாறு கோருவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியின் போது சட்டத்தை மீறும் பட்சத்தில் சட்டத்தின் பிரகாரம் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கை மேலும் முன்னேற்றத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதி மீள அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.