தங்களுடைய அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பதால், வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா.வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு செய்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி நிர்வாக பொறுப்பை, 2021இல், தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த, 1990களில் தலிபான் ஆட்சியின்போது பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது இருக்காது என, தலிபான் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆட்சி பொறுப்பை ஏற்ற பின், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது. இதுவரை எந்த ஒரு உலக நாடுகளும் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் பணியில், ஐ.நா., வளர்ச்சி திட்டம் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் பணிகளை மேற்கொள்ள, ஆப்கானிஸ்தான் பெண்களை அனுமதிக்கும்படி, தலிபான்களுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை தலிபான் நிர்வாகம் ஏற்கவில்லை. இதையடுத்து, தங்கள் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், வரும் மே மாதத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறப் போவதாக, ஐ.நா., வளர்ச்சி திட்ட நிர்வாகி ஆச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.