ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அழிந்து வரும் உயிரினங்கள்,தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.