நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் விதிகளின்படி நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமுல்படுத்தப்படவுள்ள நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, வறுமையில் வாடுவோர் மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தவர்கள், மற்றும் மிகவும் ஏழ்மையான சமூகக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் தற்போது உதவி பயன்பெறும் முதியோர்களுக்கு தனித்தனியான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தேச நலத்திட்டங்கள் 01-07-2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மொத்த செலவு ஆண்டுக்கு சுமார் 206 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.