இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினருடன் அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் வசந்த கால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வொஷிங்டன் சென்றுள்ளார்.
அவருடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் பங்குபற்றுகின்றனர்.
இதன்போது, “இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதியாகவுள்ளது. நெருக்கடியை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பங்களிப்பை வழங்குவது இப்போது முக்கியமாகும்” என ஜோர்ஜீவா இலங்கைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.