நாடளாவிய ரீதியாக உள்ள 1,704 சமுர்த்தி வங்கிகளும் திட்டமிட்ட வகையில் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி நிதியத்தின் 805 லட்சம் ரூபா நிதியைப் பயன்படுத்தி குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
எனினும் முன்னதாக இதற்கு சமுர்த்தி தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, அந்த ஒன்றியத்தின் தலைவர் சுஜீவ விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடி நிலையில் அந்தளவான தொகையை செலவிடுவதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி சமுர்த்தி வங்கிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சமுர்த்தி தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டிருந்தன.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, சமுர்த்தி வங்கிகளுக்கான நிதி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் ஊடாகவே கிடைப்பதாக சுட்டிக்காட்டினார்.
அன்றைய தினம் குறித்த இரண்டு வங்கிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அன்றைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.