ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளர் பெயரை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அறிவிக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய சிறந்த மற்றும் நிலையான வேலைத்திட்டத்தை மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்கக்கூடிய ஒரே கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் தமது அரசியல் பிரசாரத்தை வலுப்படுத்தவுள்ளதாகவும், புத்தாண்டின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளவரை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, ரஞ்சித் பண்டார, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தெரிவு செய்வதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.