ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய – கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின் வீட்டிற்கு சென்றபோதே கொச்சிக்கடை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (9) அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், நீர்கொழும்பு பதில் நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா காதியாவின் சகோதரர்களில் ஒருவரென சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் கொச்சிக்கடை காவல்துறையினரால் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஸஹ்ரானின் மைத்துனர், 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என குறித்த அதிகாரி தெரிவித்தார்.