ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.
ஈரானில் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்தியுள்ள அதிகாரிகள், மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும்.
இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு காவல்துறை தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கின.
நாளுக்குநாள் அதிகரித்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் காவல்துறை அமைப்பு கலைக்கப்பட்டது.
இருப்பினும், ஹிஜாப் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்படாமல் தொடர்ந்தும் அமுலிலே இருந்து வந்தது.
இந்தநிலையில், ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களைக் கண்காணிக்கும் வகையில் நாடு முழுதும் பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹிஜாப் அணிவதை உறுதி செய்யுமாறு வணிக நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதனை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.