ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண், தமது மரணத்துக்கு முன்னர் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய பாதுகாப்பு கெமரா காட்சிகளை, பெண்ணின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் இலங்கையரான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி (33 ) தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பு கெமராவில் பதிவான 5 மணிநேர காட்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
அந்த காட்சிகளை 7 நிமிட காணொளியாக சுருக்கி, டோக்கியோவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக காட்டப்பட்டது.
விஷ்மா இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒரு பகுதி, அவர் கட்டிலில் படுத்து இருப்பதையும், தன்னால் அசையவோ சாப்பிடவோ முடியவில்லை என்று கூறிய பிறகு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அதிகாரிகளிடம் கெஞ்சுவதையும் காட்டுகிறது.
அவள் இறந்த நாளின் மற்றொரு காட்சியில், ஒரு அதிகாரி விஷ்மாவின் விரல் நுனியில் குளிர்ச்சியாக இருப்பதாக இண்டர்கொம் மூலம் அறிவித்த பிறகு, பதிலளிக்காத விஷ்மாவை எழுப்ப முயற்சிக்கிறார்.
விஷ்மாவின் குடும்பத்தினரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த காட்சிகளை தனிப்பட்ட முறையில் பார்க்க முடிந்தது. இந்த காட்சிகளை வழக்கில் ஆதாரமாக அரசாங்கம் சமர்ப்பித்தது. அதன் ஒரு பகுதி பொதுமக்களுக்கு இன்று முதல் முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டது.
விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார். எனினும், அவரது விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
அங்கு சுமார் ஒரு மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் 2021 மார்ச் 6 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணம் அவரது சிகிச்சையின் மீது பல விமர்சனங்களை முன்வைத்து பெரும் சீற்றத்தை தூண்டியது.
சில மாதங்களுக்குப் பிறகு, புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ளும் வெளிநாட்டவர்கள் மீதான திருத்தப்பட்ட விதிகளை அரசாங்கம் கைவிடும்படி கட்டாயப்படுத்த வழிவகுத்தது.
விஷ்மாவின் குடும்பம் அவரது மரணம் தொடர்பாக அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளதுடன், அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும், தேவையான மருத்துவ வசதி இல்லாததால் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினர்.