இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அஜித் நிவார்ட் கப்ராலின் சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த மேலதிக நீதவான், பிரதிவாதி போதியளவு சாட்சிகளை முன்வைக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேலதிக நீதவான் தெரிவித்தார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2006 முதல் 2015 வரையான காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டபோது, அமெரிக்க உளவாளியான இமாட் சுபேரிக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமைச்சர்கள் சபையின் அனுமதியின்றி செலுத்தியிருந்தாக அவர் மீது குற்றம்சாட்டப்ப்டுள்ளது.