ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான சட்டமூல வரைவை தயாரிப்பதற்காக 2022. 7. 18 ஆம் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது.
சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட மேற்படி சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான சட்டமூல வரைவை வெளியிட்டு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியது.
இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது.
எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.