மருத்துவம், பொறியியல் மற்றும் கணக்கியல் துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அரசாங்கம் சாதகமாக தலையிட வேண்டும் என்றார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் இருவர் வெளியேறியதன் காரணமாக சிறுவர் பிரிவு ஒன்று மூடப்பட்டது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 700 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தற்போதும் கூட வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து மாதம் ஒன்றுக்கு சுமார் 50 விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சுக்கு வருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபோன்று வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் எதிர்வரும் காலங்களில் சுகாதார சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.