நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அந்த முறைப்பாடுகள் இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, பிரதிவாதி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சனத் நிஷாந்த நீதிமன்றம் வழங்கிய பிணை தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.