உதாகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணொருவரின் தலையை வெட்டி, அதனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாக மஹவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் 18, 19 மற்றும் 20 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உதாகம மற்றும் மஹவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ள ஒருவரின் தேவைக்காக பூசாரி ஒருவர் தலையை கேட்டதாகவும் அதன் பிரகாரம் தலையை வெட்டி எடுத்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தோண்டியெடுக்கப்பட்ட சடலத்தின் தலையை மீண்டும் புதைக்குழிக்குள் வைத்ததாக கூறியதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த 105 வயது வயோதிப பெண்ணின் தலையே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட தலையுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதோடு, அந்த புகைப்படங்களின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இறந்த வயோதிப பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனடிப்படையில், சந்தேக நபர்களை விசாரித்த பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.