மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் கையிருப்பை மிக அதிக விலையில் பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிகளவில் பணத்தை விரயம் செய்து அவசர கொள்முதலாக இந்த மருந்துகளை பெறவுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் மூன்று டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட மருந்து ஒன்றை 30,000 ரூபாவிற்கு இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதே மருந்தை சந்தையில் 3,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதற்கு முன்னர் 5,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட மருந்தை இம்முறை 49,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் கொள்வனவு வழிகாட்டல்களில் குறிப்பிடப்படாத ஒரு வழிகாட்டி இந்த மருந்து கொள்வனவுக்காக முதன்முறையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழிகாட்டுதலைப் பூர்த்தி செய்த ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே 19 மருந்துகள் தொடர்பான டெண்டர்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு வழங்க பரிந்துரைக்கப்பட்ட டெண்டர்களின் மதிப்பு மட்டும் பத்து கோடி ரூபாவுக்கு மேல் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அரசாங்கத்திற்கு வழங்கிய முந்நூறு கோடி ரூபாயில் சுமார் பத்து கோடி ரூபா இந்த மருந்துகளை கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#Aruna