வெளிநாட்டுக்கு செல்வதற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக வெள்ளியன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சிலர் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், அவ்வாறான தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என அவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், அவருக்கு சனிக்கிழமையன்று வெளிநாட்டுக்கு செல்வதற்கு விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? என்பது தொடர்பில் அடுத்த வாரம் விசாரணைகள் இடம்பெறும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.