முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 டொலர்கள் இணையத்தளம் ஒன்றின் ஊடாக திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று (09) தெரிவித்தனர்.
முறைப்பாட்டாளரின் கடனட்டையில் இருந்து 4 தடவைகள் ஒன்லைன் பரிமாற்றம் மூலம் 387 டொலர்கள் திருடப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
ரோஹித்த ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி கோட்டே 184 துவா வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மாத்தறை வீட்டிற்குச் சென்றதாகவும், அதற்கிடையில் சம்பத் வங்கியின் கடன் அட்டை கீழே விழுந்துள்ளதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இது இலங்கை குற்றவியல் சட்டத்தின் 386வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார், சம்பத் வங்கியின் தலைமையக முகாமையாளருக்கு உரிய வங்கிக் கணக்குப் பதிவேடுகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.