தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் எனவும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்பிக்க அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பளித்துள்ளது.
சொத்து மதிப்பு அறிக்கையை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட தகவல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களால் நியமிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த நபர்கள் பொதுமக்களால் பராமரிக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்காதது சட்டப்படி குற்றமாகும் என்றும், ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாவுக்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் தகுதி நீதவான் ஒருவருக்கு உண்டு என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.