தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, மறைந்த தொழிலதிபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை நடத்திய நீதி மருத்துவ அதிகாரியின் நடத்தை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ஆரம்ப நீதி மருத்துவ அதிகாரி அறிக்கை கூறியது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக அதே நீதி மருத்துவ அதிகாரி பின்னர் தெரிவித்தார்.. இது எப்படி முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வெளிநாட்டு வணிகர்கள் பொதுவாக உள்ளூர் முதலீட்டாளர்களால் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உண்மையில் தங்கள் உள்ளூர் சகாக்களுடன் வேலை செய்கிறார்கள். எனவே, தமது உள்ளூர் சகாக்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது பற்றி இலங்கை சிந்திக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷாஃப்ட்டர் குடும்பம் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த வழக்கை ஜனாதிபதி கவனிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.