கொள்ளுப்பிட்டி மற்றும் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் பலர் மீது கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை குறித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டங்களை தடைசெய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்றைய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
“போராட்டத்தை கைவிடுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை மற்றும் தடை உத்தரவு எதையும் நாங்கள் பெறவில்லை. எனவே, நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று ரஞ்சித் மதும பண்டார தெரிவித்துள்ளார்.
கறுவாத்தோட்டம் காவல்துறை எல்லைக்குள் உள்ள பல வீதிகளுக்குள், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டக்குழுவினர் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.