ஹம்பாந்தோட்டை மேயர் காமினி ஸ்ரீ ஆனந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துமாறும், ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அத்துடன், மேயர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும் ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையினால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திடமிருந்து தாம் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக கடிதம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டமை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக தேர்தல் அலுவலகம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு தாம் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்குப் பின் அவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.