2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் (SLC) உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வேட்புமனுத்தாக்கல் இந்த வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இலங்கை கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள SLC இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவு நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 15 முதல் 28ஆம் திகதி வரை நடைபெறும் என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் டிசம்பர் 15, 2022 அன்று நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில், SLC இன் நிர்வாக்ககுழு தேர்தலை நடத்துவதற்காக, நடைமுறையில் உள்ள விளையாட்டுச் சட்ட விதிமுறைகள் மற்றும் SLC யாப்பின் கீழ், SLC இன் தேர்தல் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் உறுப்பினர்களை நியமித்தது.
இந்தக் குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் மாலானி குணரத்ன, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஷிரோமி பெரேரா மற்றும் பல்வேறு அரசாங்க அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எம்.ஆர்.பி. திஸாநாயக்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டனர்.
புதிய விதிமுறைகள் நீண்ட கால உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடுவதைத் தடுப்பதோடு, பதவிக் காலத்தையும் கட்டுப்படுத்துவதால், வரவிருக்கும் தேர்தல் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.