முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவிருந்த ஆவணங்களில் ஒன்று காணாமல் போயுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கு, முன் விசாரணை நடவடிக்கைகாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
மோதர மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் முறைப்பாட்டில் ஆதார ஆவணமாக குறிப்பிடப்பட்ட கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதியிடப்பட்ட பணிப்பாளர் சபையின் பத்திரம் காணாமல் போயுள்ளதாக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.