நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்ட நுவரெலியா செண்பதி மெதுரவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மூவர் தலைமையிலான விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் அதன் பராமரிப்பாளர் நுவரெலியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவனந்த, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் அவர்களுடன் வந்திருந்த 30 பேர் கொண்ட அதிதிகள் குழுவினர் வளாகத்தில் இரவு விருந்தொன்றை நடத்தியுள்ளனர்.
அன்றிரவு 12:12 முதல் 3:00 வரை இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், மறுநாள் துப்புரவுப் பணிகளின் போது இரண்டு 9 மி.மீ வெற்று வெடிமருந்து உறைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, ஜெனரல் குடியிருப்பு முகாமையாளர் கடந்த 4ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அன்றைய தினம் பணிபுரிந்த மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எந்தவிதமான சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.