கொழும்பு குதிரை பந்தய திடலில் வைத்து பல்கலைக்கழக மாணவி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மாலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குருதுவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பிவைத்து, அவரது மன நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியர் ஒருவருக்கு பணியமர்த்தியதுடன், அறிக்கையை சமர்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.