ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவற்றிலிருந்து நீக்கப்படுவாரா? இல்லையா? என்ற உத்தரவு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் முப்பத்தைந்தாவது சரத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கை தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை பங்குதாரர்கள் இன்று முன்வைத்தனர்.
அதன்பிறகு, இது தொடர்பான உத்தரவு மார்ச் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி அறிவித்தார்.